search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரிக்குறவர் குழந்தைகள்"

    தன்னைப்போல், நரிக்குறவர் குழந்தைகள் படித்து நாகரீகமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், குழந்தைகளை படிப்பதற்கு வெளியூர் அழைத்து செல்ல இருந்த மாணவனை மாவட்ட கலெக்டர் பாராட்டி உள்ளார்.
    ஆரணி:

    ஆரணி தாலுகா அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் நேற்று கலெக்டர் கந்தசாமி கலந்துக் கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மாணவன் நரிக்குறவர்களுடன் உள்ளே நுழைந்தார்.

    மாணவனை பார்த்ததும், கலெக்டர் ‘வாங்க சார்’ என்று அழைத்து உட்கார நாற்காலி போடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாற்காலி கொண்டு வந்ததும் மாணவன் உட்கார்ந்தார். அவரிடம் கலெக்டர் சொல்லுங்க சார்? என்றார்.

    அந்த மாணவன், ஆரணி அடுத்த பையூரில் வசிக்கும் நரிக்குறவ மாணவன் சக்தி (வயது 13) என்று தன்னை அறிமுகப்படுத்தினார். என் தந்தை ரமேஷ், தாய் தமிழரசி. எங்கள் குடும்பம் ஊசி மணி, பாசி மணி, பலூன் விற்கும் வருவாயில் பிழைக்கிறோம் என்று கூறினார்.

    மேலும் மாணவன் சக்தி கூறுகையில்:- 3 ஆண்டுகளுக்கு முன்பு பலூன் விற்க காஞ்சீபுரத்திற்கு சென்றேன். அங்கு என்னை பார்த்த, ‘தன் கையே தனக்கு உதவி’ தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர் மகாலட்சுமி, நீ ஏன் படிக்க கூடாது. நான் உன்னை படிக்க வைக்கிறேன். இனி பலூன் விற்காதே, படித்து நீ பெரிய ஆளாக வருவாய் என்று அழைத்துச் சென்று உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்தார்.

    இதையடுத்து, நானும் மற்ற மாணவர்களை போல் டிப்-டாப்பாக மாறினேன். 2 ஆண்டுகள் அங்கேயே தங்கி 7, 8ம் வகுப்பு படித்தேன். இதையடுத்து, ஆற்காடு அடுத்த வேப்பூரில் உள்ள என் உறவினர்களை பார்க்க சென்றேன்.

    என்னை பார்த்த அவர்கள் ஆச்சரியப்பட்டனர். காரணம் நான், குறத்தி மகன் படத்தில் நரிக்குறவராக நடித்திருக்கும் ஜெமினி மகன் போலவே படித்து டிப்-டாப்பாக மாறி இருந்ததால் உறவினர்களுக்கு திகைப்பாக இருந்தது.

    உறவினர்களிடம் நடந்த வி‌ஷயத்தை சொல்லி உங்கள் பசங்களையும் என்னுடன் அனுப்புங்கள். எல்லாரும் படித்து மற்றவர்களை போல் நாகரீகமாக வாழ்வார்கள் என்று கூறினேன்.

    அதன்படி, கடந்த ஆண்டு வேப்பூர் நரிக்குறவர்களின் பிள்ளைகள் 25 பேரை கல்வி கற்க காஞ்சீபுரத்தில் சேர்த்துள்ளேன். இந்தாண்டு மேலும் 15 மாணவர்களை அழைத்துச் செல்ல உள்ளேன் என்று மாணவன் சக்தி கூறினார்.

    இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட கலெக்டர், மாணவன் சக்தியை பாராட்டினார். மேலும், இனிமேல் எல்லாரும் திருவண்ணாமலை மாவட்டத்திலேயே படியுங்கள். அதற்கான வசதியை நான் செய்து கொடுக்கிறேன் என்றார்.

    அடுத்த நிமிடம் மாணவன் சக்தி, ‘வேண்டாம் சார்... நாங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தால், மறுபடியும் பெற்றோர்கள் ஊசி மணி, பாசி மணி விற்க அழைத்து செல்வார்கள்.

    பசங்களுக்கும் புத்தி மாறிவிடும். எனவே, நாங்கள் காஞ்சீபுரத்திலேயே படிக்கிறோம் என்று கூறினார். அப்போது நரிக்குறவர்கள் எங்களுக்கு வீடு இல்லை. ரேசன் கார்டு இல்லை என்றனர். அதற்கு கலெக்டர் இலவச வீடு கட்டித்தரவும், ரேசன் கார்டு வழங்குவதாக கூறி அனுப்பி வைத்தார்.

    மாணவன் சக்தியை கவுரவிக்க கலெக்டர் நேற்று மாலை பையூரில் உள்ள நரிக்குறவர் பகுதிக்கு நேரில் சென்றார். கலெக்டர் கந்தசாமியை சால்வை அணிவித்து நரிக்குறவர்கள் வரவேற்றனர்.

    எங்களுக்கு வீடு இல்லை. குடிசையில் தான் வசித்து வருகிறோம். தண்ணீர் வசதி இல்லை. மின்சார வசதி, சாலை வசதி இல்லை என்று கூறினர். அந்த பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், நரிக்குறவர்களுக்கு வேறு இடம் தேர்வு செய்து 3 அல்லது 4 மாதங்களில் இலவசமாக வீடு கட்டி தரப்படும். இவ்வளவுக்கும் காரணம் மாணவன் சக்தி தான் என்று கூறினார்.
    ×